1. எரிமக் கலன் - அட்டவணை
  2. சிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை
  3. காற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை
  4. இயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை
  5. காலத்தின் வரலாறு - அட்டவணை
  6. சோலார் செல் அட்டவணை

Sunday, February 24, 2008

பரிசோதித்தல்-2. Testing - part 2

முழுமையான சோதனை: முதல் கட்டமாக, மேலோட்ட சோதனை முடிந்த பிறகு, ஒவ்வொரு சில்லிலும் ஒவ்வொரு பகுதியாக (block) பரிசோதிக்கப்படும். ஒவ்வொரு பகுதியிலும், பலவிதமான பரிசோதனை நடக்கும். ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெறாவிட்டாலும், அந்த சில்லை உபயோகிக்க முடியாது.

எந்தத் தேர்வில் ஃபெயில் ஆகிறதோ, அப்போது குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட தேர்வில் (உதாரணமாக லாஜிக் பகுதியில், ஷார்ட்-சர்க்யூட் தேர்வில்) ஃபெயில் ஆனதாக பதிவு செய்யப்படும். பல சில்லுக்களை சோதித்தபிறகு, எந்தப் பகுதியில், எந்தத் தேர்வில் அதிகம் ‘ஃபெயிலியர்’ என்பதும் கணக்கிடப்படும். அப்புறம் சில ஃபெயில் ஆன சில்லுக்கள் மேலும் ‘உடைத்து’ பரிசோதனை செய்ய ‘ஃபெயிலியர் அனாலஸிஸ்’ பகுதிக்கு அனுப்பப்படும். இங்கே நாம் ‘உடைத்து’ என்று சொன்னாலும், சுத்தியலை வைத்து உடைப்பதாக கற்பனை செய்ய வேண்டாம்! ஒரு நகையில் வேலைப்பாடு செய்வது போல, நுண்ணிய கருவிகளை வைத்து ஒவ்வொரு படலமாக (layer) எடுத்து, எங்கே குறை என்று பார்க்கப்படும். இதற்கு நல்ல கருவிகளும், பொறுமையும், சிறந்த தொழில் நுட்ப அறிவும் தேவை.

இது டிடெக்டிவ் (detective) வேலை போன்றது. பெரும்பாலும், “தயாரிப்பில் இந்தக் குறை இருந்தால், சோதனையில், இந்தத் தேர்வில் ஃபெயில் ஆகும்” என்று சொல்ல முடியும். ஆனால், ஒரு தேர்வில் பெயில் ஆனால், இந்தக் காரணம்தான் என்று உறுதியாக சொல்ல முடியாது. உதாரணமாக, மெட்டல் படிய வைத்தல் கொஞ்சமாக இருந்தால், இணைப்பில் பிரச்சனை (connection problem) வரும். ஆனால், இணைப்பில் பிரச்சனை என்றால், மெட்டல் படிய வைக்கும் முறையில் குறையா, அல்லது உபரி-மெட்டல்-எடுக்கும் முறையில் அதிகமாக எடுத்துவிடப் பட்டதா என்று உடனே சொல்ல முடியாது. அதனால், இந்த ஃபெயிலியர் அனாலஸிஸ் வேலை செய்ய ஐ.சி. தயாரிப்பின் எல்லா கட்டங்கள் பற்றியும் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்.

மெமரி/நினைவகம்/memory சோதனை: ரிப்பேர்/repair:

மேலே பார்த்த முறை, ஏறக்குறைய எல்லா சில்லுக்களுக்கும் பொருந்தும். ஆனால், நினைவகம் அல்லது மெமரி (memory) அல்லது ரேம் (RAM) எனப்படும் சில்லுக்களில் இந்த முறை சற்று மாறும்.
மெமரி என்பது இப்போது 256 MB (மெகா-பைட்/mega byte), 512 MB என்று பல அளவுகளில் விற்கப்படுகிறது. இதை வாங்கிப் பார்த்தால் 16 அல்லது 32 சில்லுக்கள் இவற்றில் இருக்கும். ஒவ்வொன்றும் 16 MB அல்லது 32 MB மெமரியுடன் இருக்கும்.
ஒரு byte/பைட் என்பது 8 bit/பிட் சேர்ந்தது. 1024 பைட் சேர்ந்தால் 1 கிலோ பைட் ஆகும். 1024 கிலோ பைட் சேர்ந்தால் 1 மெகா-பைட் ஆகும். இந்த மெமரியின் வடிவமைப்பைப் பொருத்து ஒவ்வொரு bit/’பிட்’டுக்கும் ஒரு டிரான்ஸிஸ்டர் தேவைப்படலாம். 16 MB மெகா-பைட் கொண்ட சில்லில், 16*1024*1024*8 = 13,42,17,728 (அதாவது சுமார் 13 அல்லது 14 கோடி) டிரான்ஸிஸ்டர்கள் சரியாக வேலைசெய்ய வேண்டும். ஒரு டிரான்ஸிஸ்டர் வேலை செய்யாவிட்டாலும், மெமரி வேலை செய்யாது.

ஒரு மெமரி சில்லை வடிவமைக்கும் போது, சரியாக 13,42,17,728 டிரான்ஸிஸ்டர்கள் மட்டும் வைத்து தயாரித்தால், 100க்கு 30 அல்லது 40 மெமரி சில்லுக்களில் ஒன்று அல்லது இரண்டு டிரான்ஸிஸ்டர்கள் வேலை செய்யாமல் போய்விடலாம். அந்த சில்லுக்கள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டால், நிறைய நஷ்டம் வரும். அதற்கு பதிலாக, வடிவமைப்பிலேயே 10 அல்லது 20 டிரான்ஸிஸ்டர்களை அதிகமாக வைத்து செய்து விடுவார்கள். இந்த டிரான்ஸிஸ்டர்களின் இணைப்பு (connection) சுலபமாக ‘’வெட்டி’ (fuse) விடும் படி இருக்கும். இவற்றை, லேசர்/laser வைத்து சில நொடிகள் சூடுபடுத்தினால் இணைப்பை உருக்கி (fuse செய்து) வெட்டி விடலாம்.

முழுமையான சோதிப்பில், ஏதாவது பிட் வேலை செய்யவில்லை என்றால், அந்த பிட் இணைப்பை வெட்டி விடலாம். இது ரிப்பேர் (repair) எனப்படும். அப்புறம் சரியாக 13,42,17,728 பிட்களுக்கு அதிகமாக இருக்கும் பிட்களையும் (அவை நன்றாக இருந்தாலும்) வெட்டி விடப்படும். முழு சோதிப்பில், பல பிட்கள் வேலை செய்யவில்லை என்றால் அதை ரிப்பேர் செய்ய முடியாது; தூக்கிப் போட்டுவிட வேண்டியதுதான். முழுமையான சோதிப்பில் எல்லா பிட்களும் நன்றாக வேலை செய்தாலும், அதிகமான 10 அல்லது 20 பிட்களின் இணைப்புகள் வெட்டி விடப்படும். இதனால், எல்லா சில்லுக்களிலும் சரியாக 16 MB இருக்கும். இலவசமாக (free) ஆக இருக்கிறதே என்று அதிக பிட்களை விட்டு விடக் கூடாது. அவற்றை, கம்ப்யூட்டரில் வைத்தால், கணக்கு சரியாக வராது.

இணைப்பை வெட்டிய பிறகு, மீண்டும் இந்த சில்லுக்களை சோதனை செய்து தேர்ச்சி பெற்ற பின் விற்பனைக்கு அனுப்பப்படும். பெரும்பாலும் ‘மறு தேர்வுக்கு’ அனுப்பப்படும் சில்லுக்களில் 100க்கு 98 தேர்ச்சி அடைந்துவிடும்.

இந்த வசதிக்குக் காரணம், எல்லா பிட்களின் அமைப்பும் ஒரே மாதிரி இருப்பதுதான். ஒரு பிராஸஸர் சில்லில் ஒவ்வொரு சர்க்யூட்டும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அங்கே இந்த ‘வெட்டி விடும்’ வேலை நடக்காது.

மெமரி சில்லில் 100க்கு சுமார் 60 சில்லுக்கள் முதலிலேயே தேர்ந்து விடும். மீதி இருக்கும் 40 சில்லுக்களில் 30 அல்லது 35 சில்லுக்களை ரிப்பேர் செய்து விட முடியும். அதனால், மெமரி சில்லுக்களை குறைந்த விலையில் விற்க முடியும்.

பிராஸஸர் சில்லுக்களில், முதலில் தேறாவிட்டால் ரிப்பேர் செய்ய முடியாது. அதனால், ஒரு வேஃபரில் கொஞ்சம் குறைந்த அளவு சில்லுக்கள்தான் தயாரிக்க முடியும். அதனால், விலை அதிகமாக இருக்கும். தவிர, பிராஸஸர் வடிவமைப்பது கடினம் என்பதாலும், இதை செய்ய ஒரு சில நிறுவனங்களே இருப்பதாலும் அவற்றின் விலை அதிகமாக இருக்கும்.

செயற்கை விண்கோள்(சாடிலைட்/satillite), ஏவுகணை ஆகிய சாதனங்களில் உபயோகப்படுத்தும் ஐ.சி.க்கள் அதிக வெப்பத்திலும் குளிரிலும் சரியாக வேலை செய்ய வேண்டும். அதனால் பரிசோதனையின் போதே இந்த வகை ஐ.சி.க்களை அதிக வெப்பத்திலும் குளிரிலும் வைத்து சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்கப்படும். இதற்கான வசதிகளும் பரிசோதிக்கும் கருவிகளில் இருக்கும்.

சுருக்கம்/summary: மொத்தத்தில், பரிசோதிக்கும் பகுதியில், முதலில் வேஃபர் ‘மேலோட்டமாக’ சோதிக்கப்படும். அதில் தேறாவிட்டால், ஃபெயிலியர் அனாலஸிஸ் செய்ய அனுப்பப்படும். ‘மேலோட்ட சோதனையில்’ தேர்ச்சி பெற்ற வேஃபர், ‘முழுமையான’ சோதனைக்கு உட்படுத்தப்படும்.

அதில், ஒவ்வொரு சில்லும் நன்றாக சோதிக்கப் பட்டு, ‘தேர்ச்சி பெற்றது’/ ‘ஃபெயில் ஆனது’ என்று பிரிக்கப்படும். பிராஸஸர் போன்ற சில்லுக்களில், தேர்ச்சி பெற்ற சில்லுக்களும் வேகத்திறனுக்கு ஏற்ப 3.2 GHz என்றோ, 3.0 GHz என்றோ தரம் பிரித்து விற்கப்ப்படும். மெமரி போன்ற சில்லுக்களில், ஃபெயில் ஆன சில்லுக்களில் பலவற்றை ரிப்பேர் செய்து மறுபடியும் சோதித்து, தேர்ச்சி பெற்றால், விற்பனைக்கு அனுப்பப்படும். அதிலும் தேர்ச்சி பெறாவிட்டால்தான் (அல்லது முதலிலேயே ரிப்பேர் செய்ய முடியாவிட்டால்), ‘ஃபெயில்’ என்ற முடிவு வரும்.

ஃபெயில் ஆன சில்லுக்கள் எந்தப்பகுதியில்/block எந்தத் தேர்வில் ‘ஃபெயில்’ ஆனது என்று குறித்துக்கொள்ளப் பட்டு, அவற்றில் சிலவற்றை ‘ஃபெயிலியர் அனாலஸிஸ்’ பகுதிக்கு அனுப்பி விடப்படும். அவற்றை ஆராய்ந்து, ஃபெயில் ஆவதன் காரணத்தை அறிந்து, அதன் மூலம் தொழிற்சாலையில் உள்ள குறைகளைக் கண்டுபிடித்து அவற்றை நீக்கி உற்பத்தியைப் பெருக்கி லாபம் காணலாம். இது சொல்வதற்கு சுலபமாக இருந்தாலும், குறிப்பாக இந்த வேலையை நடைமுறையில் செய்ய நல்ல தொழில் நுட்பமும் அறிவுத்திறனும் தேவை.

2 comments:

வடுவூர் குமார் said...

ஆமாம் இந்த பரிசோதனை வேலை செய்ய என்ன படித்திருக்கவேண்டும்?

என்ன தான் படித்திருந்தாலும்,ஒரு சில ஆண்டுகள் அங்கு வேலை செய்தால் தெரிந்துகொள்ள முடியாதா?ஆதாவது ஆர்வம் உள்ளவர்கள் ஆனால் தேவையான தகுதிப் படிப்பு இல்லாதவர்கள் இந்த வேலையை செய்யமுடியாதா?

S. Ramanathan said...

இதற்கு Electronics Engineering படித்திருக்க வேண்டும். கொஞ்சம் புரோகிராமிங் தெரிய வேண்டும். இதை நிச்சயமாக பிற துறை சார்ந்தவர்கள் வேலையில் கற்றுக் கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக நான் Electrical/ Electronics Engineering படிக்கவில்லை. வேலையில்தான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஆனால், பொதுவாக வேறுதுறை சார்ந்தவர்களை இதில் வேலைக்கு எடுக்க வாய்ப்பு குறைவு. ஏனென்றால் இவை நல்ல சம்பளம் இருக்கும் வேலைகள். Electronics துறையை சார்ந்தவர்கள் பலரும் விண்ணப்பிக்கும்போது, பிற துறை சார்ந்தவர்களை எடுத்து train செய்ய நிறுவனங்கள் விரும்பாது. (லக் இருந்தால் எதுவும் நடக்கும் என்ற disclaimer போட்டுவிடுகிறேன்)